Tuesday, February 9, 2010

இருவேறு நிலைப்பட்ட பதிப்புகள்: ஆசாரக்கோவை பதிப்பும் உரையும் பதிப்பு உருவாக்கப் பின்புலமும்

இருவேறு நிலைப்பட்ட பதிப்புகள் : ஆசாரக்கோவை
பதிப்பும் உரையும் நூல் உருவாக்கப் பின்புலமும்

இரா.வெங்கடேசன்
இளநிலை ஆய்வாளர்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
சென்னை - 05

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி தமிழ்ச்சூலில் நூல் அச்சாக்க முயற்சிகள் வெகுவாக முன்னெடுக்கப்பட்ட காலப்பகுதி. இந்தக் காலப்பகுதியில் பெரும்பாலான பழந்தமிழ் இலக்கண இலக்கியங்கள் அச்சுருவாக்கம் செய்யப்பட்டன. ஐரோப்பிய பின்புலத்தில் சமயத் தேவையை ஒட்டி உருவான புதிய அச்சுப்பண்பாடு அக்காலப்பகுதியைச் சார்ந்த தமிழார்வளர்களையும் பதிப்புத்துறையைச் சார்ந்த வணிகர்களையும் ஊக்கம்கொள்ள வைத்தன. இதன் விளைவாகச் சுவடியில் இருந்த பழந்தமிழ் இலக்கண இலக்கியங்களை அச்சாக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டனர். இன்று செவ்விலக்கியங்களாக அடையாளப்படுத்தப்படும் நூல்கள் மேற்கண்ட காலப்பகுதியில் அச்சாக்கம் பெற்றவற்றுள் முக்கியமானவையாகும்.
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு உள்ளிட்ட தொகைநூல்கள், தொல்காப்பியம் உள்ளிட்ட இலக்கண நூல்கள், பக்தி இலக்கியங்கள் உள்ளிட்டவற்றிற்கு மேற்கண்ட காலப்பகுதியில் பெருமளவு பதிப்புகள் உருவாக்கப்பட்டு வெளிவந்தன. ஆறுமுக நாவலர், சி.வை. தாமோதரம் பிள்ளை, உ. வே. சாமிநாதையர் போன்றவர்கள் அந்தப் பணியைச் செய்தனர். நூல் பதிப்பு முறைமைகள் குறித்தான நுணுக்கங்களை இவர்கள் உருவாக்கித் தந்தனர். அதே காலகட்டத்திலும் அவர்களுக்குப் பிறகும் தொகைநூல்களின் வரிசையின் அடுத்த நிலையில் உள்ள பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைச் சிலர் அச்சிட்டனர் என்றாலும் மேற்கண்டவர்கள் உருவாக்கிய பதிப்புமுறைமையை கீழ்க்கணக்கு நூல்களை அச்சிட்டவர்கள் பின்பற்றியதாகத் தெரியவில்லை. தொகைநூல்களிடத்து இருந்த பதிப்பு முறைமைகள், நேர்த்தி, கீழ்க்கணக்கு நூல்களிடத்து இல்லை. அந்த வகையில் மேற்கண்ட காலப்பகுதியில் ஒரு திருந்திய பதிப்பு கீழ்க்கணக்கு நூல்களுக்கு உருவாக்கப்படவில்லை.
பாதிரிமார்கள் கிறிஸ்தவம் பற்றிய கற்பித்தலின்பொழுது தமிழ்நாட்டில் ஏற்கனவே நிலவிய நீதி நூல்களைப் பயன்படுத்தியதின் விளைவாக அந்நூல்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.(2007.ப.18) இந்த தேவையை ஒட்டி சில கீழ்க்கணக்கு நூல்களுக்கு அச்சுப் பதிப்புகள் உருவாக்கப்பட்டன. அவற்றுள் திருக்குறளும் நாலடியாரும் முக்கியமான இடத்தைப் பெற்றன. அதன் தொடர்ச்சியாகம் அச்சூழக்குப் பிறகும் இவ்விரு நூல்களுக்கு நல்ல பதிப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. என்றாலும் ஏனைய கீழ்க்கணக்கு நூல்களுக்கு அந்தநிலை இல்லை.
ஆறுமுக நாவலர், சி.வை.தா., உ.வே.சா. போன்றவர்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, தொல்காப்பியம் போன்ற நூல்களைப் பதிப்பிக்க எடுத்துக்கொண்ட முயற்சியை கீழ்க்கணக்கு நூல்களைப் பதிப்பிக்க முயற்சித்தாகத் தெரியவில்லை. இவர்கள் தொகைநூல்களைப் பதிப்பிக்க முயற்சி மேற்கொண்டிருந்த அதே காலகட்டத்தில் கீழ்க்கணக்கு நூல்கள் பல அச்சாக்கம் பெறாது சுவடியில் இருந்துள்ளன. இருந்தும் அவற்றைப் பதிப்பிக்க எந்த முயற்சிகளையும் அவர்கள் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. இவர்களின் கவனம் தொகைநூல்களைப் பதிப்பிக்கும் முயற்சிகளில் மட்டுமே இருந்துள்ளது.
மேற்கண்ட இவர்கள் தொகைநூல்களைப் பதிப்பிக்க முயற்சிமேற்கொண்டிருந்த காலகட்டத்தில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைப் பதிப்பிக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இருந்தும் தொகைநூல்களுக்கு உருவாக்கப்பட்ட பதிப்பு முறைமைகளைக் கீழ்க்கணக்கு நூல்களைப் பதிப்பித்த சிலரால் மேற்கொள்ளப்படவில்லை. பல சுவடிகளை ஒப்புநோக்கியும் மூலபாடத் திறனாய்வு செய்தும் கீழ்க்கணக்கு நூல்களுக்குப் பதிப்புகள் உருவாக்கப்படவில்லை. இந்த நிலையை நன்கு உணர்ந்திருந்த பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை 1938 ஆம் ஆண்டு ‘பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் பதிப்பு முயற்சிகள்’ எனும் கட்டுரையில், கீழ்க்கணக்கு நூல்களுக்கு நல்ல திருந்திய பதிப்புகள் வெளிவரவில்லை என்று எழுதுகிறார். (1989,பக். 413-417) இதன் தொடர்ச்சியாகச் சில கீழ்க்கணக்கு நூல்களை அவர் பதிப்பித்து இருக்கிறார். இவ்வாறான தமிழ்நூல் பதிப்பு வரலாற்றுப் பின்புலத்தில் கீழ்க்கணக்கு நூல்வரிசையில் உள்ள ‘ஆசாரக்கோவை’ யின் உரை, பதிப்பு மற்றும் நூல் உருவாக்கம் குறித்த தகவல்களைப் பதிவு செய்யும் முயற்சியை இக்கட்டுரை மேற்கொள்கிறது.
பதிப்பு வரலாறு
பதினெட்டாம் நூற்றாண்டில் சங்கநூல்களும் கீழ்க்கணக்கு நூல்களும் சமயக் காழ்ப்புணர்ச்சி காரணமாகக் கல்வி நிலையங்களில் பயிற்றுவிக்காதநிலை இருந்துள்ளது. (1962.பக்.77,79) இந்த நிலை 19 ஆம் நூற்றாண்டில் மாற்றம் பெறத்தொடங்கியது. பிரித்தானியர்களின் கல்விக்கொள்கை இந்த மாற்றத்திற்கு அடிப்படைக் காரணமாக இருந்தது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் சில பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகச் சுவடியில் இருந்த அப்பிரதிகள் அச்சுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் நடந்தன. இந்தப் போக்குகளின் இடையில், பழம்பிரதிகள் அழிவுக்கு உட்படாமல் பாதுகாக்க வேண்டும் என்ற ஆர்வத்தின் பயனாகப் பாடத்திட்டங்களில் இல்லாதவற்றையும் அச்சுக்குக் கொண்டுவரும் முயற்சியைச் சிலர் மேற்கொண்டுள்ளனர். இந்த இருவேறு போக்குகளிலும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் அச்சாக்கம் பெற்றுள்ளன.
1857 இல் பெருவாயின் முள்ளியார் இயற்றிய ஆசாரக்கோவையைத் திருத்தணிகை விசாகப்பெருமாளையர் முன்னிலையில் தில்லையம்பூர் சந்திரசேகர கவிராய பண்டிதரால் இலட்சுமீவிலாச அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இது ஆசாரக்கோவைக்கான முதல் அச்சுப்பதிப்பாக உள்ளது(தி.ச. முன்னுரை. ப.3, 1893). கீழ்க்கணக்கு நூல்வரிசையில் உள்ள திருக்குறள் அச்சான(1812) கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் கடந்த நிலையில் அவ்வரிசையில் இருந்த ஆசாரக்கோவை அச்சான வரலாறு கவனிக்கத்தக்கது. இதன் பின்னர் சு. ப்பிரமணிய பிள்ளையவர்கள் 1883 இல் திருநெல்வேலி புதுத்தெரு ரெ. பரமசிவன் பிள்ளை விருப்பத்தின்படி தமது பாளையங்கோட்டை சிந்தாமணி யந்திரசாலையில் அச்சிட்டுப் பதிப்பித்துள்ளார். ஆசாரக்கோவை மூலமும் நச்சினார்க்கினியர் உரையும் கொண்ட பதிப்பு என்பதை அதன் முகப்புப் பக்கம் காட்டுகிறது. திருமணம் செல்வகேசவராய முதலியார் அவர்கள் 1893 இல் சென்னை பி.டி.வி. செங்கல்வராய நாயக்கருடைய அநாதை அச்சுக்கூடத்தில் ஆசாரக்கோவையை அச்சிட்டுப் பதிப்பித்துள்ளார். மேற்கண்ட இரண்டு பதிப்புகளும் 1857 ஆம் ஆண்டின் பதிப்பை அடிப்படையாகக் கொண்டு பதிப்பிக்கப்பட்டதான குறிப்புகள் அதன் முகப்பு பக்கத்தில் இடம்பெற்றுள்ளச்ன.
இந்நூல் கூறும் பற்பல ஆசாரங்களின் சம்பிரதாயங்களை இக்காலத்தறிவது கூடாமையால் கருத்துரையில் பிழைபட்ட இடங்களை ஆன்றோர் பிழைத்துக்கோடல் வேண்டும். அடியேனைப் பழிப்பதில் பயனின்று. பாக்களையேனும் இழவாமல் பாதுகாத்தல் வேண்டும் என்பதொன்றுமே இந்நூலினை அச்சிட்ட நோக்கம்.
இது ஆசாரக்கோவையைப் பதிப்பித்த செல்வகேசவராயரின் கருத்து. ஆசாரக்கோவைக்கு மாத்திரமல்ல பிற தமிழ் நூல்கள் பதிப்பிக்கப்படாமல் இருப்பதுபற்றியான கவலையையும் அவர் பதிவுசெய்கிறார்.
பண்டைத் தமிழ்ப்பனுவல்களைப் பதிப்பிப்பதென்றால் கையிலுள்ள பொருளைக் கொண்டுபோய் நட்டாற்றில் வலிய எறிந்துவிட்டு வெறுங்கையை வீசிக்கொண்டு வீடுபோய்ச் சேர்வதே முடிவான பொருள் என்பதுணர்ந்து எச்சரிக்கையாயிருப்பார்க்கு இன்னலொன்றுமில்லை. அம்முடிவான பொருளை அனுபவ சித்தமாக அறியப் பெறாதவர்கள் இன்னுஞ் சின்னாள் பழகியே அதனை அறிதல் வேண்டும். இதற்குள் அறிதுயிலமர்ந்து அயர்ந்துகிடக்கின்ற கனதனவான்கள் அத்துயிலுணர்ந்தால், அன்னவர் துணைகொண்டமின்,
கதிரவன் குணதிசைச்சிகரம் வந்தடைந்தான்
கணையிருளகன்றது காலையம் பொழுதாம்
………………………………..
அதிர் தலிலைகடல் போன்றதுளதெங்கும்
அந்தமிழ்ப்பாவாய் பள்ளியெழுந்தருளாயே
என்று திருப்பள்ளியெழுச்சி பாடுவோம். கண்வளர்த்தருளாய், தமிழாரணங்கே, தாயே தாலேலோ!.
தொடக்ககாலத்தில் தமிழ்நூல்களைப் பதிப்பித்தவர்கள் எதிர்கொண்ட இன்னல்கள் செல்வகேசவராயரின் மேற்கண்ட புலம்பலில் உள்ளது. இந்நூலை இரண்டாம் பதிப்பாக 1898 இல் பதிப்பித்து அவர் வெளியிட்டிருக்கிறார். மேற்கண்ட இரண்டு பதிப்பிலும் பழைய உரையைச் சில திருத்தங்கள் செய்து செல்வகேசவராயர் பதிப்பித்திருக்கிறார். இந்நூலை 1916 ஆம் ஆண்டு மூன்றாம் பதிப்பாக அச்சிடுகையில், பழைய பொழிப்புரையைத் திருத்தங்கள் செய்யாது உள்ளபடியே சேர்த்துப் பதிப்பித்திருக்கிறார். இந்தப் பதிப்பிற்கு தி. கனசுந்தரம் பிள்ளையிடமிருந்து கிடைத்த ஓலைச்சுவடி உதவியாக இருந்துள்ளது. இப்பதிப்பில் சில உரைவேறுபாடுகளையும் எடுத்துக்காட்டிப் பொருளட்டவணை அரும்பத அகராதி முதலானவற்றையும் சேர்த்து, முன்பதிப்பித்த இரண்டு பதிப்புகளைப் போன்று இல்லாமல் புதிய வடிவில் கட்டமைத்து இப்பதிப்பை வெளியிட்டிருக்கிறார்.
1899 இல் அருணாசலசரணர் குமாரர் நாராயண சரணரால் தஞ்சாவூர் ஸ்ரீகிருஸ்ணவிலாச அச்சியந்திரசாலையில் அச்சிடப்பட்டு ஒரு பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நச்சினார்க்கினியர் செய்த உரையுடன் கூடிய பதிப்பு என்ற குறிப்புடன் இப்பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பதிப்புகளின் அடிப்படையில் ஆசாரக்கோவைக்கான உரைகுறித்தான போக்குகள் இருவேறு விதமானதாக இருந்துள்ளது. அவை ‘நச்சினார்க்கினியர் உரை’ மற்றொன்று ‘பழைய உரை’, என்ற என்பனவாகும். இந்த இரு போக்குகளின் இடையில் மூலம் மட்டுமுள்ள பதிப்பு உருவாக்கமும் நிகழ்ந்துள்ளன.
1916 இல் பலவான்குடி மு.மு.வீர.வீரப்பசெட்டியாரால் மூலம் மட்டும் உள்ள பதிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இப்பதிப்பு கோநகர் தனவைசியன் அச்சியந்திரசாலையில் அச்சிடப்பட்டுள்ளன. மாணவர்களுளிடத்து நீதிக்கருத்துகள் சென்றடையும் நோக்கத்துடன் இப்பதிப்பு உருவாக்கப்படுவதான குறிப்பு நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு விலையின்றி கொடுக்கப்படும் என்ற குறிப்பும் நூலில் காணப்படுகின்றன. கிறித்துவ மதப்பரவலுக்கு எதிரான செயல்பாடுகளை முன்னேடுத்ததில் ‘பாகநேரி தனைவைசியர் இளைஞர் மன்ற’த்திற்கு முக்கியப் பங்கு இருந்துள்ளது. இந்த அமைப்பின் பின்புலத்தில் செயல்பட்ட அச்சியந்திரசாலையில் இந்நூல் அச்சிடப்பட்டு இலவசமாக வழக்கப்பட்ட செய்தி முக்கியமானதாகும்.
1939 ஆம் ஆண்டிற்குப் பிறகு நச்சினார்க்கினியர் உரை, பழைய உரை என்ற குறிப்புகள் இல்லாது விருத்தியுரையுடன் கூடிய நூலாக ஆசாரக்கோவை அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது. 1939 இல் பாளையங்கோட்டை அர்ச் சவேரியர் கல்லூரித் தலைமைத் தமிழாசிரியராக இருந்த பு.சி. புன்னைவனநாத முதலியார் எழுதிய விருத்தியுரையுடன் கூடிய பதிப்பைச் சைவசிந்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ளது. இதன் மறுபதிப்புகள் 1949, 1954, 1960 எனத் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. 1959 இல் மர்ரே நிறுவனம் சந்தி பிரித்த பதிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் பின்னர் மேற்கண்ட பதிப்புகள் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு இன்றைய பதிப்பகங்கள் ஆசாரக்கோவையைப் பதிப்பித்து வெளியிட்டுவருகின்றன. இவர்கள் வெளியிடும் பதிப்புகள் முழுக்க வணிகரீதியிலானவை. அந்த காகித குப்பைகள் பற்றிப் பேசும்படியான செய்திகள் இல்லை.
மேற்குறித்த ஆசாரக்கோவையின் பதிப்புகளை ஒருங்குவைத்துப் பார்க்கின்ற சூழலில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான பதிப்பு முறைமைகளைக் கொண்டு செல்வகேசவராயர் மட்டுமே அந்நூலைப் பதிப்பித்திருக்கிறார். தனக்கு முன்னாள் பதிப்பித்த சிலர் ஆசாரக்கோவைக்கு இருந்த உரையை நச்சினார்க்கினியர் உரை என்று கருதி பதிப்பித்து வெளியிட்டுள்ளனர். அதைக் கண்னை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்ளாமல் சில தமிழறிஞர்களோடு கலந்துபேசி அவ்வுரை நச்சினார்க்கினியர் உரை இல்லை என்ற முடிவுக்கு அவர் வருகிறார். பின்னர் அதைப் பெயர் தெரியா ஆசிரியர் உரையாதலின் பழைய உரை என்ற அடையாளமிட்டுப் பதிப்பித்திருக்கிறார். சோடசாவதானம் சுப்பராயச் செட்டியார் 1874 இல் ‘பழமொழி’க்கு இருந்த பழைய உரியுடன் புதிய உரை எழுதிசேர்த்தும் பாடல் அமைப்பை மாற்றியமைத்தும் பதிப்பித்திருக்கிறார். இதை மறுத்து பழைய உரையை உள்ளபடியே சேர்த்து 1916 ஆம் ஆண்டு ‘பழமொழி’ யைச் செல்வகேசராய முதலியார் அச்சிட்டு வெளியிட்டிருக்கிறார். (1989,பக். 413-417) இவ்வாறு பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் சிலவற்றிற்கு நல்ல பதிப்புகள் உருவாக்குவதில் அக்கறையுடன் அவர் செயல்பட்டுள்ளார்.
மேலும் பாடல், பழைய பொழிப்புரை, பதவுரை, கருத்துரை என்னும் அமைப்பிலான பதிப்பைப் செல்வகேசவராயர் வெளியிட்டிருக்கிறார். ஆக வாசகன் எளிமையாக அணுகும் தன்மையிலான பதிப்பை அவர் ஒருவர் மட்டுமே வெளியிட்டிருக்குறார் எனும் செய்தியை ஆசாரக்கோவை பதிப்பு வரலாற்றின்வழி பெறமுடிகிறது. (பதிப்புப் பட்டியல் பின்னிணைப்பில் தரப்பட்டுள்ளது)
பதிப்பும் – பாடவேறுபாடுகளும்
ஆசாரக்கோவைக்குப் பல்வேறு பதிப்புகள் வெளிவந்துள்ள நிலையில் பாடவேறுபாட்டாய்விற்கு மூன்று பதிப்புகள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. முதற் பதிப்பு(1857) கிடைக்காத நிலையில் ச. சுப்பிரமணிய பிள்ளையால் அச்சிட்டு 1883 இல் வெளிவந்த பதிப்பும், நாராயணசரணரால் அச்சிட்டு 1899 இல் வெளிவந்த பதிப்பும் தி. செல்வகேசராயரின் 1916 இல் வெளிவந்த பதிப்பும் பாடவேறுபாட்டாய்விற்கு ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. 1893 இல் வெளிவந்த செல்வகேசவராயரின் பதிப்பு கிடைக்காதநிலையில் இரண்டாம் பதிப்பைக் (1898)காட்டிலும் அவரது மூன்றாம் பதிப்பு (1916) சிறந்த பதிப்பாக உள்ளதன் அடிப்படியில் 1916 இல் வெளிவந்த பதிப்பை ஆதாரமாகக் கொண்டு பாடவேறுபாடுகள் தொகுக்கப்பட்டுள்ளன.
எடுத்துக்கொள்ளப்பட்ட மூன்று பதிப்புகளில் ச. சுப்பிமணிய பிள்ளைப் பதிப்பு (1883) செல்வகேசவராயர் பதிப்பு(1916) ஆகிய இரண்டு பதிப்புகளில் உள்ள மொத்தப் பாடல்களில்(கடவுள் வாழ்த்து உட்பட 101 பாடல்கள்) எட்டுப் பாடல்கள் நாராயணசரணர் பதிப்பில் (1899) விடுபட்டுள்ளன. அதேவேளையில் மற்ற இரண்டு பதிப்புகளில் இல்லாத மிகைப்பாடல் ஒன்றும் இப்பதிப்பில்(1899) இடம்பெற்றுள்ளது. (இந்த மிகைப்பாடல் பின்னிணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது)
மேற்கண்ட மூன்று பதிப்புகளை ஒப்புநோக்கிப் பார்த்ததன் அடிப்படையில் 52 பாடவேறுபாடுகள் தொகுக்கப்பெற்றுள்ளன. இந்தப் பாடங்களுள் சிலவற்றைப் பிரதிசெய்வோரால் உருவானவையாகச் சொல்லலாம். குறிப்பாக,
றென்ருரையார் – றென்றுரையார்
மனைகவிழார்- மணைகவிழார்
போன்ற பாடங்களை அவ்வகையினவாக அடையாளப்படுத்தலாம். இப்பாடங்கள் பாடலில் மட்டுமே வேறுபடுகின்றன. உரைப்பொருளில் ஒரே பொருண்மையில் காணப்படுகின்றன.
செல்வகேசவராயர் பதிப்பு(1916), ச.சுப்பிரமணியபிள்ளை பதிப்பு(1883) இரண்டும் விசாகப்பெருமாளையர் முன்னிலையில் பதிப்பித்த பிரதியை(1857) அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டிருப்பினும் இரண்டிற்குமான பாடங்கள் பெரும்பாலும் வேறுபட்டுக் காணப்படுகின்றன. ஆனால், நாராயணசரணர் பதிப்பு(1899) செல்வகேசவராயர் பதிப்பு(1916) இரண்டிலும் பெரும்பாலான பாடங்கள் ஒத்து காணப்படுகின்றன. நாராயணசரணரின் பதிப்பில் உள்ள பாடங்கள் சிலவற்றைச் சுப்பராய முதலியார் பாடவேறுபாடாகக் காட்டுகிறார்.
தொகுக்கப்பெற்ற பாடங்கள் முழுவதையும் விவாதிப்பின் தனி ஆய்வாக விரியும் நிலையில், ஒரு சில பாடங்களை மட்டும் விவாதித்து மதிப்பீடு செய்யப்படுகின்றன. பெரும்பாலான பாடங்கள் பாடலில் மட்டும் வேறுபட்டு உரைகளில் ஒரே பொருண்மையிலுமாக காணப்படுகின்றன. உதாரணமாகச் சில பாடங்களைக் காண்போம்.
1. கொள்ளார் – கொல்லார் - இவற்றுள் ‘கொள்ளார்’ எனும் பாடம் 1899, 1916 ஆம் ஆண்டு பதிப்புகளிலும் ‘கொல்லார்’ எனும் பாடம் 1883 ஆம் ஆண்டு பதிப்பிலும் இடம்பெற்றுள்ளன. ‘தம்பொருட்டூன் கொள்ளார்’ /‘தம்பொருட்டூன் கொல்லார்’(பா.39) எனும் பாடல் வரிக்கு ‘தெய்வப்பொருட்டன்றித் தம் காரணத்தால் கொன்று ஊனைக் கொள்ளார், எனும் உரைப்பொருளே பொதுமைப்பட மூன்று பதிப்புகளிலும் காணப்படுகின்றன.
2. சேரியகத்தும் – சேரியனைத்தும் - இந்த இருபாடங்களில் ‘சேரியகத்தும்’ எனும் பாடம் செல்வகேசவராயர் பதிப்பு, நாராயணசரணர் பதிப்பிலும் காணப்படுகின்றன. ‘சேரியனைத்தும்’ ச.சுப்பிரமணியபிள்ளை பதிப்பில் உள்ள பாடமாகும். ஆக இந்த இரு பாடத்திற்கும் , ‘பொதுமகளிர் சேரிக்கண்ணும்’, ‘பொதுமகளிர் சேரியிலும்’ என்னும் உரைப்பாடமே காணப்படுகின்றன. இவ்வுரைப் பாடத்தில் பொருண்மைநிலையில் எந்த மாற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை.
இதைப்போன்றே பெரும்பாலான பாடங்கள் காணப்படுகின்றன. இவற்றைப் பாடவேறுபாடாகக் கொள்ளாமல் சுவடி பெயர்த்து எழுதுவோரால் நேர்ந்த பாடமாக அடையாளப்படுத்தலாம். (பாடவேறுபாட்டுப் பட்டியல் பின்னிணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது).
பதிப்பும் உரை வேறுபாடும்
ஆசாரக்கோவைக்கு அமைந்த உரையைப் பற்றி இருவேறுபட்ட கருத்துகள் இருந்ததை அறிகிறோம். இந்நூலைப் பதிப்பித்த பதிப்பாசிரியரிடத்து இந்த வேறுபட்ட கருத்துகள் நிலவிவந்துள்ளன. ச. சுப்பிரமணிய பிள்ளையும், நாராயணசரணரும் நச்சினார்க்கினியர் உரை என்ற குறிப்புடனேயே ஆசாரக்கோவையைப் பதிப்பித்துள்ளனர். ‘மதுரை ஆசிரியராகிய பாரத்துவாசி நச்சினார்க்கினியரால் அருளிச்செய்யப்பட்ட உரையும்’(1883) என்றும் ‘நச்சினார்க்கினியர் செய்த பொழிப்புரையும் (1899) என்ற குறிப்புகள் இரண்டு பதிப்பிலும் காணப்படுகின்றன.
1893 ஆம் ஆண்டு செல்வகேசவராயர் பதிப்பில் பழைய உரை என்ற குறிப்பே காணப்படுகின்றது. ஆசாரக்கோவைக்கு அமைந்த உரை நச்சினார்க்கினியர் உரை இல்லை அது பழைய உரை என்ற குறிப்பையே பதிப்புரையில் அவர் தந்திருக்கிறார்.
“முதன்முறை பதிப்பித்தவர்கள் ஆசாரக்கோவையின் உரையை நச்சினார்க்கினிய ருரையெனக் கூறியிருக்கின்றார்கள். நச்சினார்க்கினியனார்க்கிய ருரைச்சிறப்புப் பாயிரத்தில் இதற்கு ஆதரவில்லை. இப்போது அச்சிடத்தொடங்கிய பின்னர்; சிற்சிலவிடத்துப் பாவுடன் உரையின் முடிபினைப் பொருத்த இயலாமல் இடர்படுவேன். சில பேராசிரியர்களை உசாவி யவிடத்தும் அன்னார் ஆசாரக்கோவையுரை நச்சினார்க்கினியருரை யன்றென்றே உறுதிகூறினார்கள்.”(பதிப்புரை. 1893)
பலருடன் விவாதித்ததன் அடிப்படையில் ஆசாரக்கோவைக்கு இருந்த உரை பழைய உரை என்ற முடிவுக்கு அவர் வருகிறார். முதன்முறை பதிப்பித்தவர்கள் என்று முதலியார் கூறுவதன்வழி தில்லையம்பூர் சந்திரசேகர கவிராய பண்டிதர் பதிப்பித்த முதல் பதிப்பும் நச்சினார்க்கினியர் உரை என்ற குறிப்புடனேயே வெளிவந்திருக்க வேண்டும்.
ச.சுப்பிரமணிய பிள்ளை பதிப்பு(1883), நாராயணசரணர் பதிப்பு(1899) இரண்டும் நச்சினார்க்கினியர் உரை என்ற குறிப்புடன் பதிப்பிக்கப்பட்டிருப்பினும் இரண்டிற்குமான உரை அமைப்பு வேறுபாட்டுடன் காணப்படுகின்றன. உதாரணமாக,
“நீரின்கட் டன்னிழலை விரும்பி நோக்கார், நிலத்தை யிருந்துகீறார், இரவின்கண் ணொருமரத்தின்கண்ணுஞ் சேரார், நோய்கொண் டிடர்ப்பட்டாராயினும் நீரைத் தொடாதே யெண்ணெயு டம்பின்கட்டேயார். அவ்வெண்ணெய் தேய்த்தபின் றம்முடம்பின்மேல் நீரைத் தெளித்துக் கொள்ளாது புலையைத் தன்கண்ணா னொக்கார்.”
என்று 1883 ஆம் ஆண்டு பதிப்பிலும்,
“நீரில் தமதுசாயையை விரும்பிப்பாரார் இருந்து நிலத்தைக் கீறார் இராப்பொழுதில் ஒருமரத்தையும் அணுகார் பிணியால் துன்பமாயினும் நீரைத்தொடாமல் எண்ணெய் உடம்பிற் றேய்த்துக்கொள்ளார் தேய்த்துக்கொண்டபிறகு தம்உடம்பின்மீது நீர்த்தெளித்துகொள்ளாமல் புலையனைப் பார்க்கமாட்டார் அறிவுடையோர் என்பதாம்.”
என்று 1899 ஆம் ஆண்டு பதிப்பிலும் 14 ஆம் பாடலுக்கான உரை அமைப்பு காணப்படுகின்றன.
‘உரையிலக்கியத்தைப் பொறுத்த வரையில், பாடவிமர்சனம் தொடக்க நிலையிற்கூட இல்லை’ (2007.ப.4). பதிப்புலகில், மூலபாடத்தைப் பல பிரதிகளோடு ஒப்புநோக்கி பாடவிமர்சனம் செய்யும் போக்கு ஓரளவு பின்பற்றப்பட்டு வருகின்றன. ஆனால், உரைப்பாடத்தை ஒப்புநோக்கி பாடநிர்ணயம் செய்யும் போக்கு இல்லை. அவ்வாறான முறையைப் பின்பற்றுவதன்மூலமே, மேற்காணப்பட்ட மூலத்திற்கும் உரைக்குமான வேறுபாடுகளை இனங்கான முடியும்.
ஆசாரக்கோவைக்கான உரை நச்சினார்க்கினியர் உரையன்று எனும் முடிபினை செல்வகேசவராயர் கொண்டிருந்தாலும் அவ்வுரையை எவ்வாறு அடையாளப்படுத்துவது என்ற தயக்கம் அவரிடம் முதலில் இருந்திருக்கின்றது. 1893, 1898 ஆம் ஆண்டு பதிப்புகளில், உரையை ‘இதன் பொருள்’(இ.பொ.) என்ற குறிப்புடன் தந்திருப்பதன்வழி அதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால், 1916 ஆம் ஆண்டு மூன்றாம் பதிப்பாக அச்சிடுகையில் தெளிவான முடிவுடன் ‘பழைய பொழிப்புரை’(ப.பொ) என்ற குறிப்புடனேயே பதிப்பிக்கிறார்.
இருவேறுநிலைப்பட்ட போக்குகளும் நூல் உருவாக்கமும்
ஆக ஆசாரக்கோவைக்கமைந்த உரையைப் பற்றிய தனக்கு முன்பிருந்த குழப்பான நிலையைச் செல்வகேசவராயர் போக்கியுள்ளார். தனக்கு முன் பதிப்பித்தவர்களைப் போன்று கண்மூடித்தனமான போக்குகளைப் பின்பற்றாமல் ஆசாரக்கோவையைத் திருந்திய பதிப்பாக வெளியிட சிரத்தையுடன் அவர் செயல்பட்டுள்ளார். அவர் பதிப்பித்த அந்த பதிப்பை ஆதாரமாகக்கொண்டே இன்று பதிப்புகள் வெளியிடப்படுகின்றன. எந்த பதிப்பை ஆதாரமாகக்கொண்டு புதிய பதிப்புகள் உருவாக்கப்படுகின்றன என்ற தகவலைப் பதிவுசெய்கின்ற வழக்கம் தமிழ்ச்சூழலில் பின்பற்றப் படுவதில்லை. ஏதோ தாங்களே சுவடியைப் ஒப்புநோக்கிப் பார்த்து, பாடநிர்ணயம் செய்து பதிப்பிப்பதான எண்ணத்துடனேயே இன்றைய பதிப்பாளர்கள் பழம்பிரதிகளைப் பதிப்பித்துவருகின்றனர். இவ்வாறானபோக்குடன் 1939 ஆம் ஆண்டு கழக வெளியீட்டதைத் தொடர்ந்து ஆசாரக்கோவையைப் பதிப்பித்துவருகின்றனர்.
இறுதியாக ஆசாரக்கோவையின் பதிப்பு வரலாறு பற்றியும், உரையைப் பற்றியும் தொகுத்து பார்க்கின்ற சூழலில் நமக்கு அப்பிரதி பற்றியான சில குறிப்புகளைப் பெறமுடிகிறது. பழம்பிரதியை மீட்டுருவாக்கம் செய்யும் பணியை ஒரு பதிப்பாசிரியன் மேற்கொள்வதாக இருக்கவேண்டும். அந்தப் பணியைச் செல்வகேசவராயர் செய்திருக்கிறார் என்று சொல்லலாம்.
அதே வேளையில் ஆசாரக்கோவைக்கான உரையை நச்சினார்க்கினியர் உரை என அடையாளப்படுத்தப்பட்டதின் பின்புலம் என்ன என்பதை ஆய்வுசெய்யவேண்டியுள்ளது. இந்நிலையில் அந்நூல் உருவாக்கம் குறித்தான செய்திகளை அறிந்துகொள்வதும் அவசியமாகிறது.
இலக்கிய வரலாற்று நிலைநின்று நோக்குகின்றபொழுது, ஒவ்வொரு காலப்பிரிவிலும், தோன்றுகின்ற இலக்கியங்கள் பற்றிய தரவுகள் எத்தனை முக்கியமானவையோ, அத்தனை முக்கியமானவை ஒவ்வொரு காலத்திலும் நிலவும் நூலுற்பத்தி முறைமை பற்றிய அறிவுமாகும். பொருளாதார உற்பத்திக்குச் சொல்லப்படுவதுபோல தோற்றுவிப்பு, தயாரிப்பு, சந்தைப்படுத்தல், நுகர்வோர் என்பன போன்ற பெரும்படையான தலைப்புகள் மாத்திரமல்லாமல் தோற்றுவிப்பதில் தொழிற்படும் தொழில்நுட்பங்களும் முக்கியமானவையாகும். எழுதப்படும் ஏடு, அது எழுதுவதற்குத் தயாராக்கப்படும் முறைமை, அது கட்டப்படும் முறைமை என்பவையும் இலக்கியப்படைப்பு எவ்வாறு ஏட்டுருப்படுத்தப்படுகிறது என்பது பற்றிய நடைமுறையும் முக்கியமான தொழில்நுட்ப அம்சங்களாகும். (2007.ப.29)
மேற்குறித்த சிவத்தம்பி கூற்றிலிருந்து ஆசாரக்கோவை நூல்உருவாக்க முறைமைகள் குறித்தான சில தகவல்களைக் குறிப்பிடலாம்.
ஆசாரக்கோவை பதிப்பு உருவாக்கம் குறித்தான பின்புலத்தைத் தேடிப்பார்க்கின்றபொழுது ஒரு உறுதியான காரணத்தைச் சொல்ல முடியவில்லை. சந்தைப்படுத்தல், நுகர்வோர் குறித்தான அம்சங்களில் பார்க்கின்றபொழுது பதிப்பு உருவாக்க காலத்தில் கல்வி நிலையம் சார்ந்த பாடத்திட்டங்களில் இந்நூல் இடம்பெற்றிருந்ததற்கான குறிப்புகள் இல்லை. இப்படியான சூழலில் நூல் உருவாக்கம் எவ்வாறு நடைபெற்றது என்ற வினா எழுகிறது.
இந்நூல் உருவாக்க காலத்து முன்னைய, பின்னைய சமூகச் சூழலை அவதானிக்கின்ற பொழுது மேற்கண்ட வினாவிற்கு விடை காணமுடியும். கிறித்துவ மதப்பரப்பலுக்கு எதிர்நிலையிலான செயல்பாடுகள் சில இந்த நூல்உருவாக்க காலத்திற்கு முன் நிகழ்ந்துள்ளன. அவற்றுள் முக்கியமானதாக வைதீகம் சார்ந்த நூற்பதிப்பு செயல்பாடுகளாகும். ஆறுமுக நாவலரின் சைவ வினாவிடை(1875), வயி.நாக.ராம.அ.இராமநாதச்செட்டியாரின் சைவசமயிகளுக்கு விக்கியாபனம்(1896) ஆகியன மேற்குறித்த பின்புலத்தில் உருவாக்கப்பட்ட நூல்களாகும்.
Ø கிறிஸ்துமதத்தைக் கண்டிப்பனவும் சைவ சமயத்தைத் தாபிப்பனவுமாகிய துண்டுப்பிரசுரங்களை எங்கும் பரப்புதல்.
Ø சைவசமயப் பிள்ளைகளைப் பாதிரியார் பள்ளிக் கூடங்களுக்குப் போகவிடாமற்றடுத்தல்.
Ø கிறிஸ்தவர் பள்ளிக்கூடங் கட்டவும் கோயில் கட்டவும் நம்மவர்கள் பொருள் வாஞ்சையினாலே நிலம் கொடாதபடி தடுத்தல்(1896.ப.8)
மேற்குறித்த சைவசமியிகளுக்கு விக்கியாபன நூலில் இடம்பெற்ற இந்த வாசகம் முக்கியனானவையாகும். இந்த மாதிரியான செயல்பாட்டின் தொடர்ச்சியாக வைதீகம் சார்ந்த ஒழுக்கங்களைக் கூறுகின்ற ஆசாரக்கோவை நூல் உருவாக்க முயற்சியும் நடந்திருக்கலாம்.

துணைநூல்கள்

1. கனகரத்தினம். இரா.வை., ஆறுமுக நாவலர் வரலாறு: ஒரு புதிய பார்வையும் பதிவும், பூரணம் வெளியீடு, கொழும்பு, முதற்பதிப்பு, 2001.
2. சிவத்தம்பி கார்த்திகேசு, தமிழ்நூற் பதிப்பு பணியில் உ.வே.சா. பாடவிமர்சனவியல் நோக்கு, குமரன் புத்தக இல்லம், சென்னை, 2007
3. தம்பையாபிள்ளை.சி, சைவசமயிகளுக்கு விக்கியாபனம், வயி. நாக. ராம. அ.இராமநாதச்செட்டியார் (ப.ஆ), மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1896
4. வேங்கடசாமி, மயிலைசீனி, பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம், அழகப்பா புத்தக நிலையம், திருச்சி, முதற்பதிப்பு, 1962.
5. வையாபுரிப்பிள்ளை, பேராசிரியர்.எஸ். இலக்கியச் சிந்தனைகள், வையாபுரிப்பிள்ளை நூற்களஞ்சியம், முதல் தொகுதி, பேராசிரியர் எஸ். வையாபிரிப்பிள்ளை நினைவு மன்றம், முதற்பதிப்பு- 1989.

Tuesday, August 18, 2009

வ.உ.சி.பதிப்புகள்

வ.உ.சி.யின் பதிப்புப்பணி
இரா.வெங்கடேசன்
இளநிலை ஆய்வு வளமையர்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

கல்லூரி ஆசிரியர் பணியில் சேர, ஐ.எஸ்.பி.என்(ISBN)நம்பரோடு கூடிய நூலை வெளியிட்டிருந்தால்தான் தகுதியாளர் என்று அரசு அறிவிப்பு வந்தவுடன், அடுத்தவர் எழுதிய நூலைக்கூடத் தன் பெயரில் அச்சிட்டுக்கொள்ளப் பதிப்பகத்தைத் தேடி தெருத் தெருவாக அலையும் இன்றைய இளைய தலைமுறையினரில் பலருக்கு வ.உ.சிதம்பரனாரின் பதிப்புப்பணி பின்புலத்தைத் தெரிந்து வைத்திருக்க வாய்ப்பு இல்லைதான்.
சுயநல உணர்வில் தன் மரபையே மறந்து போன தமிழனுக்கு வ.உ.சி.யின் பதிப்புப் பணியை மறந்து போயிருப்பது ஒன்றும் வியப்புக்குரியதல்ல. வ.உ.சி. யின் மாபெரும் அரசியல் சாதனைகளே மறக்கப்படும் நிலையில், அதிகம் அறியப்படாதவையான அவருடைய தமிழ்ப்பணியின் ஒரு பகுதியான பதிப்புப்பணியின் நிலை கேள்விக்குறிதான்.
தமிழன் என்றுமே வரலாற்றை மறந்து போகக்கூடியவன் என்பதற்கு “நாட்டுப்பற்றால் முன்னே நாய்படாப் பாடுபட்ட , ஓட்டைப் பிடார ஒளிர்மறவன் -மாட்டன்று, நன்றி பாராட்டாத நாடொரு நூற்றாண்டு , சென்ற பின் செய்யும் சிறப்பு” என்று வ.உ.சி. நூற்றாண்டு விழா நேரத்தில் பாவாணர் கூறிய பாடலே சான்றாகும்.
பலரின் தமிழ்நூல் பதிப்புப்பணி, வரலாற்றில் பரந்து காணப்பட்டாலும், வ.உ.சி. யின் பதிப்புப்பணியை வியந்து பார்ப்பதற்குக் காரணம், கோவை சிறையில் செக்கிழுத்த சூழலிலும் தொல்காப்பியத்தை வாசித்து அதன் பெருமையை உணர்ந்து எளிய உரையொன்று எழுதிப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று அவர் சிந்தித்த ‘சிந்தனைச் சூழலை’த். தவிர வேறொன்றுமில்லை.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை யாருமே அறியாது, ஓலைச்சுவடிகளில் உறங்கிக்கிடந்த தொல்காப்பியப் பொருளதிகார இளம்பூரணர் உரையை அச்சிட்டுத் தமிழ் ஆய்வுலகிற்கு வழங்கியவர் வ.உ.சி. அவர்களேயாகும். எழுத்ததிகார, சொல்லதிகாரத்திற்கு இளம்பூரணர் உரையுடன் 19 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலேயே வெளிவந்துவிட்டன. 1920 -இல் கா.நமச்சிவாய முதலியார் பொருளதிகார அகத்திணை, புறத்திணையியலை மட்டும் இளம்பூரணர் உரையுடன் அச்சிட்டு வெளியிட்டிருந்தாலும், பொருளதிகாரம்-இளம்பூரணர் உரையை முழுவதுமாக முதன் முதல் வ.உ.சி.யே பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.
1910 -ஆம் ஆண்டு கோவைச் சிறையில் செக்கிழுத்துக் கொண்டிருந்த சூழலுக்கு இடையிலும், தொல்காப்பியத்தை முழுவதுமாக வாசித்துள்ளார். இந்த வாசிப்பின் விளைவாகப் பழைய உரைகளின் கடுநடையை உணர்ந்து எளிய உரை எழுத எண்ணியிருந்தார். சிறையிலிருந்து வெளிவந்த பின்னர் எளிய உரையும் எழுதியுள்ளார். பின்னர் சென்னை எழும்பூரில் வசித்தகாலத்தில் தான் எழுதிய உரையைப் பூர்த்தி செய்யக்கருதி தி. செல்வகேசவராய முதலியாரிடம் எடுத்துச் சென்று சரிபார்த்துள்ளார். அப்பொழுது தொல்காப்பிய இளம்பூரண அச்சுப்புத்தகமும் சொல்லதிகார ஏட்டுப்பிரதியும், பொருளதிகார ஏட்டுப்பிரதி சிலவும் த.கனகசுந்தரம் பிள்ளையிடமிருந்து கிடைத்துள்ளது. அதைப் படித்துப்பார்த்தபோது இளம்பூரணரின் எளிய உரையைக்கண்டு தான் உரை எழுதுவதை விடுத்து, தொல்காப்பியம்-இளம்பூரணர் உரையைப் பதிப்பிக்கும் பணியைத் தொடங்கியுள்ளார்.
1920- ஆம் ஆண்டு தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தையும், பொருளதிகாரத்தையும் இளம்பூரணர் உரையுடன் அச்சிடத் தொடங்கியுள்ளார். 1921- இல் பொருளதிகார அகத்திணையியல், புறத்திணையியல் ஆகிய இரண்டு இயல்களைக் கொண்ட முதல் தொகுதியை அச்சிட்டு வெளியிட்டுள்ளார். 1928- இல் எழுத்ததிகார இளம்பூரணர் உரையை வெளியிட்டுள்ளார். பொருளதிகார இளம்பூரணர் உரை ஏடுகளை எஸ்.வையாபுரிப்பிள்ளை, தி. நா. சுப்பிரமணிய அய்யர், த. மு. சொர்ணம்பிள்ளை முதலானோரிடமிருந்து வ.உ.சி.பெற்றுள்ளார்.
பொருளதிகாரத்தின் எஞ்சிய ஏழு இயல்களை வையாபுரிப்பிள்ளை உதவியுடன் 1938 - இல் களவியல், கற்பியல், பொருளியல் எனும் மூன்று இயல்களைச் சேர்த்து ஒரு தொகுதியாகவும் 1936 - இல் மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் எனும் நான்கு இயல்களைச் சேர்த்து ஒரு தொகுதியாகவும் அச்சிட்டு வெளியிட்டுள்ளார். இவ் ஏழு இயல்களில் மாத்திரம் 878 பாடவேறுபாடுகளை வ.உ.சி. சுட்டிக்காட்டியுள்ளதாகக் க.ப. அறவாணன் கூறுவார். (செந்தமிழ் செல்வி. செப்.1972) இச் செய்தி வ.உ.சி. யின் கடின உழைப்பை புலப்படுத்துவதாக உள்ளது.
இப்பதிப்புகளின் வெளியீட்டிற்கு த.மு.சொர்ணம் பிள்ளையின் கடிதப்பிரதி, தி.நா. சுப்பிரமணிய அய்யர் கடிதப்பிரதி, எஸ். வையாபுரிப்பிள்ளையின் ஏட்டுச்சுவடி முதலியன உதவியதாகவும் வாவிள்ளா இராமஸ்வாமி சாஸ்த்ருலு பொருளுதவி புரிந்ததாகவும் வ.உ.சி. அப்பதிப்புகளின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். இது அவரின் நன்றிமறவா உள்ளத்தைக் காட்டுவதாக உள்ளது.
தொல்காப்பிய எழுத்து, சொல், பொருள் எனும் மூன்று அதிகாரத்திற்குமான நச்சினார்க்கினியர் உரையுடன் கூடிய பதிப்பை சி.வை.தாமோதரம்பிள்ளைப் பதிப்பித்து வெளியிட்டதைப் போன்று, தொல்காப்பியம் முழுமைக்குமான இளப்பூரணர் உரையைப் பதிப்பிக்க வ.உ.சி. எண்ணியிருந்தார் என்பதை 1928 -ன் எழுத்ததிகாரப் பதிப்புரையின் வழி தெரியவருகிறது. ஆனால் என்ன காரணத்தாலோ எழுத்து, பொருள் எனும் இரண்டு அதிகாரத்தை மட்டும் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார்.
தொல்காப்பியம் பொருளதிகார இளம்பூரணர் உரை மட்டுமல்லாது திருக்குறள் மணக்குடவர் உரையை முதன்முதல் அச்சிட்டு வெளியிட்டவரும் வ.உ.சி.தான். அப்பதிப்பு 1917-இல் வெளிவந்துள்ளது. இதே ஆண்டில் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இன்னிலைக்கும் விருத்தியுரை எழுதி வெளியிட்டார்.
வ.உ.சி. பதிப்புகளின் சிறப்புக் கூறுகளாக இரண்டைக் குறிப்பிடலாம். ஒன்று ஏட்டுப்பிரதிகளிலும் அவருக்கு முந்தைய பதிப்புகளிலும் நூற்பாவுக்குத் தரப்பட்டிருந்த பொழிப்புரைக்கு மாற்றாகப் பதவுரை எழுதிப் பதிப்பித்தது. இரண்டு உரைவேறுபாடு காட்டல். உதாரணமாக நூன்மரபு 14 ஆவது நூற்பாவிற்கு “புறத்துப்பெறும் புள்ளியோடு உள்ளாற்பெறும் புள்ளி மகரத்திற்கு வடிவம்” என்ற இளம்பூரணர் உரையை மறுத்து “உள்ளாற் பெறும் புள்ளி குறுகிய மகரத்திற்கு வடிவம்” என்பதே இச்சூத்திரத்திற்குச் சரியான உரை எனக்குறிப்பிட்டுப் ‘புறத்தாற் பெறும்புள்ளி’ என்னும் சொற்றொடரைத் தேவையற்றதாக்கி உரைவேறுபாடு காட்டுகிறார். (தொல்.இளம்.1928)
தன் அரசியல் போராட்ட வாழ்க்கைச் சூழலிலும் வ.உ.சி. பதிப்பணியில் ஈடுபட எது காரணமாக இருந்திருக்கும். தனியாத தமிழ் ஆர்வமும் 1912 -ல் சிறையிலிருந்து வெளிவந்த பின்னர் திருமணம் செல்வக்கேசவராய முதலியார், எஸ்.வையாபுரிப்பிள்ளை போன்றோரிடத்து ஏற்பட்ட நட்புமே காரணமாக இருந்திருக்க வேண்டும்.
தமது நாற்பதாண்டுக் காலப் பணியை(அரசியல் பணி) மக்கள் போதிய அளவு உணரவில்லையே என்ற வருத்தம் அவருக்கு இருந்திருக்க வேண்டும் . அவ் வருத்தத்தைப் போக்கி ஆற்றிக்கொள்ளும் துறையாக, இலக்கியத்துறை அவருக்கு வாய்த்ததாகவும் அதன் மூலம் தன் துயரத்தை வ.உ.சி.போக்கிக்கொண்டதாகவும் க.ப.அறவாணன் கூறுவார். (செந்தமிழ் செல்வி.செப்.1972) வ.உ.சி. யின் வாழ்க்கை வரலாற்றை படித்துப் பார்க்கின்றபோது அறவாணனின் கருத்து எவ்வளவு உண்மையென்று உணரமுடியும்.
விடுதலைப் போராட்ட இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய வ.உ.சி. யின் மாபெரும் அரசியல் பணியையும் தமிழ்பணியையும் மறந்துபோனதை எண்ணிப்பார்க்கும்பொழுது, வரலாற்றை என்றுமே புரிந்துகொள்ளாதத் தமிழரின் அவலநிலைதான் நினைவுக்கு வருகிறது.

துணைநின்ற நூல்கள்
1. அரசு.மா.ரா, வ.உ. சிதம்பரனார் , சாகித்திய அகாதெமி –முதல் பதிப்பு- 2005
2. அறவாணன்.க.ப., வ.உ.சி. யின் இலக்கணப் பதிப்புப்பணி , செந்தமிழ்ச் செல்வி- செப்டம்பர் -1972
3. சிதம்பரம்பிள்ளை. வ.உ. (ப.ஆ) தொல்-எழுத்து-இளம்-1928.
4. மேலது, பொருள், பகுதி -1 ,1933
5. மேலது, பொருள், பகுதி -2 ,1936

மர்ரே பதிப்புகள்



எளிய அமைப்பு, மலிவு விலை : சாக்கை ராஜம் பதிப்புகள் இரா. வெங்கடேசன்
செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனம்

சில நிகழ்வுகளை நாம் பின்னோக்கிப் பார்க்க வேண்டிய தேவையுள்ளது. சில நிகழ்வுகள் நம்மைப் பின்னோக்கிப் பார்க்கவும் செய்கின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பல நிகழ்வுகள் நம்மைத் பின்னோக்கிப் பார்க்கவைக்கக்கூடியன. இருபதாம் நூற்றாண்டு புதிய மாற்றத்தை நோக்கிச் செல்வதற்கான வழியைப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நிகழ்வுகளே அமைத்துத்தந்துள்ளன. தொழிற்புரட்சியின் தொடர்ச்சியாக வளர்ச்சி பெற்ற சிந்தனையின் விளைவு உலகம் முழுமைக்குமான, புதிய மாற்றத்திற்குத் தேவையான பல நிகழ்வுகள் அந் நூற்றாண்டில் நடந்துள்ளன. அதில் முக்கிய நிகழ்வாக அச்சு ஊடக வருகையைச் சொல்லவேண்டி உள்ளது. குவிந்துகிடந்த சிந்தனை மரபு வெகுசன மக்களைச் சென்றடையும்படியான போக்குகள் அச்சு ஊடக வருகையினாலேயே நிகழ்ந்துள்ளது. இதன் விளைவாக உலகம் முழுமைக்குமான பெரும் சிந்தனை மாற்றத்திற்கு அச்சு ஊடகம் காரணமாக இருந்துள்ளதை நாம் புரிந்துகொள்ள முடியும்.
அச்சு ஊடக வருகை குறித்தான பின்புலத்தில் தமிழ்ச்சூழலிலும் புதிய மாற்றங்கள் உருவாகும்படியான பல நிகழ்வுகள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் நிகழ்ந்துள்ளன. அவற்றுள் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று பழந்தமிழ் இலக்கண இலக்கியப் பிரதிகள் அச்சில் பதிப்பிக்கப்பட்டதாகும். இருபதாம் நூற்றாண்டின் புதிய ஆராய்ச்சிப் போக்கிற்குப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அச்சில் பதிப்பிக்கப்பட்ட நூல்கள் பெரும்துணைபுரிந்துள்ளன. பழந்தமிழ்ப் பிரதிகளைப் பதிப்பித்ததன் வழி தமிழின் தனித்துவத்தைத் தேடிச் செல்லும்படியான ஆய்வுகள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டன. இதன்வழி தமிழின் அடையாளங்கள் மீளக் கண்டெடுக்கக்கூடிய ஆய்வுகளும் நடந்தன. இவ்வாறான பல புதிய ஆய்வுப்போக்கிற்குப் பெருந்துணையாக இருந்தது பதிப்புத் துறையாகும். இப் பதிப்புத்துறை தமிழ்ச்சூழலில் பலராலும் கண்டுகொள்ளப்படாமல் உள்ளது. இது தமிழின் மிகப்பெரிய சோகம். இவ்வாறான தமிழ் அச்சுப் பதிப்புப் பின்புலத்தை அச்சு ஊடக வருகை குறித்தான பின்புலத்தோடு பதிவு செய்யவேண்டிய தேவையுள்ளது. அதன் ஒரு பகுதியை நிறைவுசெய்யும் வகையில் தமிழ்ப் பதிப்பு வரலாற்றுப் போக்கில் தனித்த இடத்தைப் பெற்ற மர்ரே அண்ட் கம்பெனியின் பதிப்பு முயற்சியை இக்கட்டுரை மேற்கொள்கிறது.

தமிழ்ப் பதிப்புப் போக்குகள்:
மர்ரே நிறுவனத்தின் பதிப்பு முயற்சியைப் பார்க்கும் முன் தமிழ்ப் பதிப்புப் போக்கு, பார்க்கவேண்டிய ஒன்றாகும். தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் இருவகையான போக்குகளைக் காணமுடியும். ஒன்று தனிநபர் சார்ந்த போக்கு, மற்றொன்று நிறுவனம் சார்ந்த போக்கு. தொடக்கக் காலத்தில் தனிநபர்களே பல அரிய நூல்களைப் பதிப்பித்திருப்பதைப் பார்க்கமுடிகிறது. அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்களாகச் சிதம்பர பண்டாரம், தாண்டவராய முதலியார், அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார், கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர், புதுச்சேரி நயனப்ப முதலியார், முத்துசாமிப் பிள்ளை, ஆறுமுக நாவலர், சி.வை. தாமோதரம் பிள்ளை, உ.வே. சாமிநாதையர் முதலானோரைக் குறிப்பிடலாம். இவர்களின் பதிப்பு முயற்சியைத் தனிநபர் சார்ந்ததாக அடையாளப்படுத்தலாம். சென்னைக் கல்விச் சங்கம் (1820) பவானந்தர் கழகம் (1916) சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் (1920) முதலானவற்றின் பதிப்பு முயற்சியை நிறுவனம் சார்ந்ததாக அடையாளப்படுத்தலாம். இந்த இருவகையான பதிப்புப் போக்கில் நிறுவனம் சார்ந்ததாக மர்ரே அண்ட் கம்பெனியின் பதிப்பு முயற்சியைப் பார்க்கவேண்டியுள்ளது.
மர்ரே சாக்கை ராஜம்:
திருத்துறைப்பூண்டிக்கு ஆறு கல் தொலைவிலுள்ள துளசாபுரம் என வழங்கும் சாக்கை என்னும் ஊரில் கோபாலையங்கார், கோமளத்தம்மாள் ஆகியோருக்கு மகனாக 22.11.1904 இல் பிறந்தவர் எஸ். ராஜம். இளமையிலிருந்தே நன்கு கற்றுத்தேறி வந்து G.D.A. என்ற கணக்குத் தணிக்கைக்குரிய படிப்பில் ராஜம் வெற்றி பெற்றுள்ளார்1 . இந்தப் படிப்பே பின்னாளில் அவரை மர்ரே நிறுவனத்தில் பணிக்குச் சேரும்படியான வாய்ப்பை உருவாக்கித்தந்துள்ளது. மேலும் சட்டத்துறையிலும் நன்கு பயிற்சியுள்ளவராக ராஜம் விளங்கியுள்ளார்.
சென்னையில் ‘மர்ரே கம்பெனி’ (Murray and Company) என்னும் பெயரில் ஆங்கிலேய ஏல நிறுவனம் ஒன்று நன்கு செயல்பட்டு வந்துள்ளது. ஆங்கிலேயர் இந்தியாவை விட்டு வெளியேறியபோது மர்ரே நிறுவனத்தாரும் சென்றுவிட்டனர். அந்நிலையில் நிறுவனத்தில் உதவியாளர் பணியில் இருந்த எஸ். ராஜம், வி. சீனிவாசய்யங்கார் அறிவுரைப்படி மர்ரே நிறுவனத்தை தாம் ஏற்றுத் தமையனார் வேதாந்தம் அய்யங்காருடன் மர்ரே நிறுவனம் என்ற பெயரிலேயே அந்த ஏலத் தொழிலைச் சிறப்புற நடத்தி வந்துள்ளார்2. பின்னாளில் நிறுவனத்தின் முழுப்பொறுப்பையும் ராஜமே ஏற்று நடத்தி வந்துள்ளார். அவர் ஏற்று நடத்திய நிறுவனத்தின் பெயராலேயே மர்ரே ராஜம் என்று பின்னாளில் அடையாளப்படுத்தப் பட்டார்.
முதுமையில் தம் நிறுவனத்தைத் தம் தமையனார் மருமகனிடம் ஒப்படைத்து, அவரிடமிருந்து பெற்றுவந்த பணத்தையும் பொதுநலன் கருதிச் சில அறக்கட்டளைகள் நிறுவி , அவ்வறங்கள் தொடர்ந்து பலன் அளிப்பதற்குச் செலவிட்டுள்ளார்3. கோயில்களுக்கும் நன்கொடைகள் பல வழங்கி வந்துள்ளார். இவ்வாறு அறச்செயல்கள் செய்து வந்த ராஜத்திற்கு 1940களில் வெ. ந. அப்புசாமி அய்யர் மூலமாகப் பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளையின் தொடர்பு கிடைத்துள்ளது. அப்பொழுது பேரா. எஸ். வையாபுரிப்பிள்ளை சென்னைப் பல்கலைக்கழத்தில் பணியாற்றி வந்துள்ளார். இருவரின் சந்திப்பே பின்னாளில் சந்தி பிரித்த பதிப்புகள் வெளிவருவதற்குக் காரணமாக இருந்துள்ளது. கோவில்களுக்கு அறச்செயல்கள் செய்தல் போல எளியவர்களும் வாங்கிப் படிக்கும்படியாக நூல்களை அச்சிட்டு வழங்குதலும் அறக்கொடையே என வையாபுரிப்பிள்ளை ராஜத்திடம் கூறியதாகச் சொல்லப்படுகிறது. தமிழார்வத்துடன் இருந்த ராஜம் உடனே இதற்கு இசைவளித்துள்ளார். நூல் பதிப்பிக்கும் பொறுப்பை வையாபுரிப்பிள்ளை ஏற்றுக்கொண்டுள்ளார். இதன் பின்னர் திவ்யப் பிரபந்தத்தின் முதலாயிரத்தை 1955 இல் சந்தி பிரித்து வெளியிட்டுள்ளார். எஸ். வையாபுரிப்பிள்ளை இதற்குப் பதிப்பாசிரியராக இருந்துள்ளார். இந்நூல் மர்ரே நிறுவனத்தின் முதல் வெளியீடாகும். வையாபுரிப்பிள்ளையின் தொடர்பாலேயே நூல்கள் வெளியிடும் திட்டத்திற்கு பொருளுதவி செய்யும்படியான சிந்தனை ராஜத்திற்கு ஏற்பட்டுள்ளது. 1955 இற்குப் பிறகு ‘தமிழிலக்கியச் செல்வம்’ என்னும் தொடரில் பல தமிழிலக்கியங்களை அவர் வெளியிட்டுள்ளார். திவ்வியப் பிரபந்த முதலாயிரத்தைத் தொடர்ந்து ஏனைய திவ்வியப் பிரபந்தப் பாடல்களும் திருவாசகம், சிலப்பதிகாரம், மணிமேகலை, அட்டபிரபந்தம், கல்லாடம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பாட்டும் தொகையும், கம்பராமாயணம், பதினெண்கீழ்க்கணக்கு, வில்லிபாரதம் ஆகியனவும் வெளியிடப்பட்டுள்ளன.
பேரிலக்கியங்கள் மட்டுமன்றிச் சில சிற்றிலக்கியங்களையும் சாசன மாலை என்னும் கல்வெட்டு குறித்தான நூலொன்றையும் ‘சந்தி குறியீட்டு விளக்கம்’ என்னும் அரிய கையேடு ஒன்றினையும் ராஜம் வெளியிட்டுள்ளார். வையாபுரிப்பிள்ளைக்குப் பிறகு ஒரு சிறந்த பதிப்பாசிரியர் குழுவைக்கொண்டு இவ் வெளியீட்டுப் பணியை அவர் செய்துள்ளார்.

1960-இல் இலக்கிய வெளியீட்டிற்காக ‘சாந்தி சாதனா’ என்ற அறக்கட்டளையையும், ஏழை மக்கள் இறுதிக்கடனுக்கு உதவ வகைசெய்யும் வகையில் ‘கிரியா சாதனா’ என்ற அறக்கட்டளையையும் குழந்தைகள் படிப்பிற்காகவும் அவர்களின் மேம்பாட்டிற்காகவும் ‘சேவா சாதனா’ என்ற ஓர் அறக்கட்டளையையும் ராஜம் ஏற்படுத்தியுள்ளார். சில சிறு நிறுவனங்கள் மக்களுக்குச் சேவை செய்ய நன்கு செயற்படும் நிலையிலிருந்தும் பணமுட்டுப்பாடு காரணமாக நலிந்துவிடக் கூடாது என்று கருதி அவைகளுக்கு ஊக்கமளித்து நன்கு செயற்படும்படி ஊக்கமளித்து உதவ ‘பெசந்து ராசன்’ ( P. & R. Trust) என்ற அறக்கட்டளையையும் அவர் நிறுவியுள்ளார். மேலும் தினம் தம் இல்லத்தில் இறைமணம் கமழும் வகையில் திருமால் வழிபாடு தொடர்ந்து நடைபெற ஓர் அறக்கட்டளையையும் ராஜம் நிறுவியுள்ளார்4. இவ்வாறு வாழ்நாள் முழுவதும் அறச்செயல் செய்வதையே பெரும் தொண்டாகக் கருதி வாழ்ந்து வந்த சாக்கை ராஜம் 13.03.1986 - இல் காலமானார்.
மர்ரே அண்ட் கம்பெனி வெளியீடுகள்:
திவ்யப் பிரபந்தம் தென்னாட்டில் நமது வைஷ்ணவப் பெருமக்களால் பெரிதும் போற்றப்படும் சிறந்த பக்தி நூல். இதன் கவிதைச் சுவையும் அழகும் நுகர்ந்துநுகர்ந்து இன்புறத்தக்கன. தமிழ் மக்கள் அனைவருக்கும் பொதுவுடைமையாக இது கொள்ளுதற்குரிய பெருந்தகுதி வாய்ந்தது. பக்திப் பாடல் என்ற நூல் வகையில் இதனைப் போன்ற பெருமையுடைய நூல்கள் இலக்கிய உலகில் மிகமிகச் சிலவற்றைத்தான் கருதுதல் கூடும். இங்ஙனமிருந்தும் நமது தமிழ்ப் பொதுமக்களில் பலர் இதனைக் கல்லாதிருப்பது பெருங்குறையாகும். வைணவர்கள் மட்டுமேயன்றித் தமிழ்ப் பொதுமக்களும் இந்நூலைக் கற்றுணர்ந்து பயன் பெறுதல் வேண்டும். இதுவே இப்பதிப்பின் தலைமையான நோக்கம்5. என்ற கருத்தை முன்னிறுத்தியே ‘திவ்யப் பிரபந்தம் - முதலாயிரம்’ வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்மக்கள் பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்கவேண்டும் என்ற உயரிய நோக்கமும் விருப்பமுமே பிற்பட்ட அனைத்துப் பதிப்பிற்கும் காரணமாக இருந்துள்ளது. எஸ். ராஜம், நெ. 5, தம்புச்செட்டித் தெரு, சென்னை-01 என்ற முகவரியிலிருந்துதான் அனைத்து வெளியீடுகளும் வெளியிடப்பட்டுள்ளன. சிறந்த பதிப்பாசிரியர் குழுவைக்கொண்டு ஓரளவு கற்றவரும் எளிதில் பொருள் புரிந்துகொள்ளுமாறு சொற்களைச் சந்தி பிரித்தும் நிறுத்தற் குறிகள் இட்டும் நூல்களைப் பதிப்பித்திருப்பது இந் நிறுவனப் பதிப்புகளின் சிறப்பம்சமாகும். சமகாலத்தில் மற்ற பதிப்பு நிறுவனங்கள் புராண இதிகாச நூல்களையும் சங்கப்பாடல்களையும் ரூபாய் 50, 100 என்று விற்றுவந்த நேரத்தில் மிகக் குறைந்த (ஒரு ரூபாய்) விலையில் நூல்களை அச்சிட்டு வழங்கிப், எளிய மக்களும் வாங்கிப் படிக்கும்படியான ஒரு சூழலை மர்ரே நிறுவனம் உருவாக்கியது. முதலாயிரத்தைத் தொடர்ந்து பிரபந்தத்தின் ஏனைய பகுதிகள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, காப்பியங்கள், கம்பராமாயணம், வில்லிபாரதம், சிற்றிலக்கியங்கள் என 1955- இல் இருந்து 1960வரை நாற்பது நூல்களை எளிய சந்தியமைப்பிலும் மலிவு விலையிலும் மர்ரே நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் நாற்பது நூல்கள் சந்தி பிரித்து வைக்கப்பட்டுள்ளன. அவை இன்றுவரை வெளியிடப்படாமல் உள்ளன. (இவற்றின் பட்டியல்கள் பின்னிணைப்பில் தரப்பட்டுள்ளன)
தமிழில் சந்திபிரிப்பு:
மர்ரே நிறுவனத்தின் சந்தி பிரித்த பதிப்புகளைப் புரிந்துகொள்ள, தமிழில் நூல்களை அச்சிடுவதில் ஏற்பட்டு வந்துள்ள சிறுசிறு மாற்றங்களைப் பார்க்கவேண்டியுள்ளது. பதிப்புக் கலை வளர வளர நூல்களை வெளியிடும் முறையிலும் மாற்றம் நேர்ந்தது. அவற்றுள் ஒன்று சந்தி பிரித்துப் பதிப்பித்தலாகும். பொருள் விளக்கத்திற்காகச் சொற்களைப் பிரித்துப் பதிப்பித்தனர்.6 தொடக் ககாலத்தில் நூல்கள் சுவடிகளில் உள்ளது போன்றே நிறுத்தற்குறி இல்லாமல் அச்சிடப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக அடிகளைப் பிரித்தும் சீர்களைப் பிரித்தும் சந்தியைப் பிரித்தும் பதிப்பிக்கும்படியான படிநிலை மாற்றங்கள் தமிழ்ப்பதிப்பில் ஏற்பட்டுள்ளன. மேலைத் தேயச் சிந்தனைப் போக்கின் வெளிப்பாடுகளுள் ஒன்றான உரைநடை வளர்ச்சி, பரவலாக அனைத்து மக்களிடத்தும் இலக்கியங்கள் சென்றுசேர வேண்டும் என்ற கருத்தோட்டம் ஆகியன சந்தி பிரித்துப் பதிப்பிக்கும்படியான தேவையை உருவாக்கியுள்ளன. சந்தி பிரித்துப் பதிப்பிக்கும் சிந்தனை நெடுநாட்களாகவே தமிழ்ச்சூழலில் இருந்துவந்துள்ளது. சென்னைக் கல்விச் சங்கத்துத் தமிழ்ப்புலவராக இருந்த திரு. வேங்கடாசல முதலியார் 1843-இல் கம்பராமாயண அயோத்தியா காண்டப் பதிப்புநூலின் விளம்பரத்தில் ,
“இந்த ஸ்ரீமத் கம்பராமாயணம் அயோத்தியா காண்டத்தில் 60 ஆம் பக்கம் தொடங்கி, பின் தொடர்ந்து வருகிற அந்தந்த திருவிருத்தத்திலும், அடிதோறும் உள்ள சொற்கள் எல்லாத்தையுமே, எழுத்துச் சந்தி பண்ணாமலும் விகாரப்படுத்தாமலும், அடி தொடை நோக்கியும், வேண்டும் இடம் அறிந்தும், சிலதுகளை மாத்திரம் எழுத்துச்சந்தி பண்ணியும் விகாரப்படுத்தியும், மற்றதுகளை எல்லாம் சந்திபிரித்தும், அச்சிற்பதிப்பித்து இருக்கிறோம். அப்படி எதுக்காக செய்யப்பட்டது என்றால், இதற்குமுன்னமே லோகோபகாரம் ஆக, எம்மால் அச்சிற்பதிப்பிக்கப் பட்டிருக்கின்ற சில சுவடிகளைப் பார்வை இட்டவர்களில், இந்த பிராந்தியத்துப் பிரபுக்களும், வித்துவான்களும், புலவர்களும், கவிராயன்மார்களும் உபாத்தியாயர்களும் ஆயிருக்கிற சில பெயர்கள், அந்த சுவடிகளில் பயன் இல்லாத சந்தியையும் விகாரத்தையும் விலக்கி, பயன் உள்ள சந்தியையும் விகாரத்தையும் வைத்துக்கொண்டு, அதுகள் அச்சிற் பதிப்பிக்கப்பட்டிருக்கையினாலே, இத்தமிழ் ஆனது லோகத்துக்கு உபகாரம் ஆகவேணும் என்று நமது முன்னோர்கள் நினைத்தபடிக்கு நாங்கள் பிரயோசனம் கண்டோம்; ஆகையால் அப்படியே இதிலும் செய்யப்படவேண்டும் என்று எம்மைக் கேட்டுக்கொண்டார்கள்” என்று சந்தி பிரித்தல் குறித்தான சிந்தனையைப் பதிவு செய்கிறார். பெரும்பாலும் சந்தி பிரித்தல் குறித்தான சிந்தனை சமய இலக்கியப் பதிப்பாசிரியர்களிடத்து மிகுதியாக இருந்துள்ளது எனலாம். சாதாரண மக்களிடத்தும் சமயக் கருத்துகள் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தின் வெளிப்பாடாக அவற்றைக் கருதலாம். அதே வேளையில் ஆங்கில மொழியின் வருகைகுறித்தான பின்புலத்திலும் சந்தி பிரிப்புத் தேவையைப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. 1895-இல் வெ. ப. சுப்பிரமணிய முதலியார் பதிப்பித்த ‘சுவர்க்க நீக்கம்’ மொழிபெயர்ப்பு முகவுரையில்,
தமிழறிந்தோர் ஆங்கிலேய பாஷையில் பழகுமுன் எழுதப்பட்ட நமது வசனநூலில், ஒரு வசனத்தின் முடிவையும் அடுத்த வசனத்தின் துவக்கத்தையும் காட்ட வசனங்களுக்கிடையே முடிப்பிசைக்குறி (FullStop) யிட்டும் இடம்விட்டும் எழுதலாவது, ஒரு வசனத்தினுள்ளேயே வாசிப்போன் நிறுத்தி வாசிக்க வேண்டிய இடங்களில் உறுப்பிசைக்குறி (Comma) முதலிய குறியிட்டு இடம் விடுதலாவது இல்லை. அந்தக் குறை இப்போது இங்கிலிஷ் பாஷையின் வழக்கத்தை அநுசரித்து வேண்டுமிடத்து இடம்விடுதலாலும் பல குறியீட்டினாலும் நிரப்பப்பட்டுவிட்டது. அவ்வாறு செய்யுள் எழுதும் முறை சீர்திருத்தப்படவில்லை. இப்போது அச்சிடப்பட்டுள்ள சில நூல்களில் செய்யுள் சீர் பிரித்துப் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றது என்று கூறுவதன் வழி, ஆங்கிலமொழிப் பின்புலத்திலேயே முடிப்பிசைக்குறி, உறுப்பிசைக்குறி, சந்தி பிரிப்பு முதலான முறைகள் தமிழில் கைக்கொள்ளப்பட்டுள்ளன என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
இவ்விரு கருத்துகளும் சந்தி பிரித்து வெளியிடுதலின் தேவையை உணர்த்துகிறது. இத் தேவையின் ஒட்டுமொத்த வடிவமாக மர்ரே நிறுவனத்தாரின் பதிப்புகளைக் கொள்ளலாம். 1955-இல் பதிப்புப் பணியைத் தொடங்கி 1960வரை நாற்பதிற்கும் மேற்பட்ட நூல்களை மர்ரே நிறுவனம் சந்தி பிரித்து வெளியிட்டுள்ளது. அவ்வாறு சந்தி பிரித்து அச்சிடும் முறைக்குப் பேரா. எஸ். வையாபுரிப்பிள்ளையே வித்திட்டுள்ளார். ராஜம் வெளியிட்ட முதல் நூலுக்கு பதிப்பாசிரியராக இருந்து தொடங்கிவைத்த பணி பின்னாளில் பல நூல்கள் வெளிவருதற்குக் காரணமாக இருந்துள்ளது. சந்தி பிரித்து அச்சிடும் முறைகுறித்தான சிந்தனை தொடக்கம் முதலே வையாபுரிப்பிள்ளையிடத்து இருந்துவந்துள்ளது; 1944-இல் தாம் பதிப்பித்து வெளியிட்ட நான்மணிக்கடிகை முன்னுரையில் அவர் கீழ்வருமாறு குறிப்பிடுவதன் வழி அதை நாம் புரிந்துகொள்ளமுடியும்.
இந் நூலினைப் பதிப்பிடுதலில் ஒரு சில நியமங்களைக் கையாண்டுள்ளேன். இவற்றைக் குறித்துச் சில ஆண்டுகளாக நான் கருத்தூன்றி ஆலோசனை செய்ததுண்டு. புது நியமங்களுக்கு அவசியம் உண்டா? என்ற ஐயப்பாடும் இடையிடையே தோன்றியது. ஆங்கிலத்தில் ‘சாஸர்’ இயற்றிய கவிகளைத் தற்காலத்துள்ளார் பொருளுணர்ந்து கொள்வதற்கு அருமையாயிருத்தல்பற்றி, சொல்லின் எழுத்தமைதியை (Spelling) மாற்றி அச்சியற்றல் தகுமா? இது போன்றதுதானே செய்யுளில் சொற்களைப் பிரித்து அச்சிடுதல்? இங்ஙனம் பிரிப்பதால் செய்யுளின் ஓசை கெட்டுவிடுமல்லவா? இவை போன்ற கேள்விகளுக்கு முற்றும் திருப்திகரமான விடையளிப்பது எளிதல்ல. ஆனால், பொருள் எளிதில் விளங்கும்படி அச்சியற்றவேண்டும் என்ற நோக்கும் கைக்கொள்ள வேண்டுவதாயுள்ளது. இரு வகை மனப்பாங்கிற்கும் ஒரு சமரசம் ஏற்படவேண்டியது அவசியம். இந்நெறியில் நான் சிறிது முயற்சி செய்திருக்கிறேன். அனுபவம் பெருகப் பெருக இந் நியமங்கள் திருந்தியமையலாம். செய்யுள் பயிலுவோரின் தொகை அதிகரித்துவரும் இந் நாளில் இந் நியமங்கள் தக்கபடி ஆராயப்பட்டு அனைவர்க்கும் உடம்பாடான சில நியமங்கள் ஏற்படக்கூடும். அக்காலம் விரைவில் வரின் நலமாகும். வையாபுரிப்பிள்ளையிடம் இருந்த இவ்வாறான சிந்தனையே மர்ரே ராஜத்திடம் சந்தி பிரித்து வெளியிடும்படியான திட்டத்தை முன்வைப்பதற்குக் காரணமாக இருந்தது எனலாம்.
மர்ரே பதிப்புகளின் தன்மை:
மூலபாடத்தை மட்டும் எளிய சந்தியமைப்பில் அமைத்துத் தந்திருப்பது மர்ரே பதிப்புகளின் சிறப்புத் தன்மையாகும். செம்மையான நெறிமுறைகளை வகுத்துக்கொண்டே சந்தியைப் பிரித்துள்ளனர். எதைப் பிரிப்பது, எதைப் பிரிக்கக் கூடாது என்ற தெளிவான வரைமுறைகளை அவர்கள் பின்பற்றியுள்ளனர். சந்தி பிரித்தல் குறித்த 140 பக்க அளவிலான ‘சந்தி குறியீட்டு விளக்கம்’ என்ற நூலை 1960-இல் மர்ரே நிறுவனம் வெளியிட்டுள்ளது. தம் நிறுவனம் வெளியிட்ட பதிப்புகளில் கையாளப்பட்ட சந்தி பிரிப்பு விவரங்களைக் கொண்ட நூல் அது. ‘சந்தி பிரித்தலில் சில நியதிகள்’ என்ற பகுதியில் தம் நிறுவனப் பதிப்புகளில் பின்பற்றப்பட்ட 32 நியதிகளை அந்நூல் பட்டியலிட்டுக் காட்டுகிறது.
உதாரணமாக, சந்தி பிரிக்காத இடங்களாக,
1. மரபுவழிப்பட்ட அடைமொழிகள் - கொடுங்குழை,வாண்முகம்
2. ஒரு சொல் நீர்மைத்தாக அமைந்த சொற்கள் - வேளாண்மை, மேற்பட
3. வேற்றுமையுருபுகள், சாரியை, சொல்லுருபுகள், சேர்ந்துவரும் பெயர்கள் - படியை, மடியகத்து.
போன்ற சந்திவிதிகளை அந்நூல் வரையறுத்துள்ளது. மேலும் பொருள் விளக்கத்திற்காக வேண்டிய இடங்களில் காற்புள்ளி, அரைப்புள்ளி, உணர்ச்சிக்குறி முதலான நிறுத்தற் குறியீடுகளை இப்பதிப்புகளில் கையாண்டுள்ளனர். எந்தப் பிரதியை ஆதாரமாகக் கொண்டு இப்பதிப்பு உருவாக்கப்படுகின்றது என்ற தகவலைச் சுட்டிக்காட்டுகின்ற பதிப்பு நேர்மை இந் நிறுவனப்பதிப்புகளில் காணப்படுகின்றன. உதாரணமாக, 1957இல் வெளியிடப்பட்ட சிலப்பதிகார முகவுரையில் ‘உ. வே. சாமிநாதையர் பதிப்பை ஆதாரமாகக் கொண்டு இப் பதிப்பை உருவாக்குகிறோம்’ என்ற செய்தியைப் பதிவுசெய்கின்றனர். இன்றைய பதிப்பாசிரியர் பலரிடத்து இந்த நேர்மையைக் காணமுடிவதில்லை.
ஒவ்வொரு பதிப்பும் முகவுரை, நூற்பகுதி, சிறப்புப்பெயர்கள், பாடற்முதற் குறிப்பகராதி என்ற அமைப்பிலேயே அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பாட ரூப பேதங்கள், அரும்பத விளக்கம், உரைவிளக்கம், முதற்குறிப்பு அகராதிகள் அமைத்தல், ஒரு பிரதி குறித்தான பிற தகவல்களைத் தருதல் எனப் பல சிறந்த பதிப்பு நெறிமுறைகளை மர்ரே பதிப்புகளில் காணமுடிகிறது. உதாரணமாகத் திவ்வியப் பிரபந்தப் பதிப்புகளில் அப்பிரதி குறித்தான கதைக் குறிப்புகளைத் தந்திருப்பதைச் சுட்டலாம்.
பதிப்புக் குழு:
ஆங்கிலப் பதிப்புத்துறையில் பதிப்பாசிரியர் குழு ஒன்று இருப்பதைப் போல மர்ரே நிறுவனப் பதிப்புப் பணியிலும் ஒரு சிறந்த பதிப்புக் குழு இருந்துள்ளது. அன்றைய நிலையில் பெரும் தமிழறிஞர்களாக இருந்த பெரும்பாலானோர் மர்ரே பதிப்புக் குழுவில் இருந்துள்ளனர். எஸ். வையாபுரிப்பிள்ளை, மு.சண்முகம்பிள்ளை, வி.மு.சுப்பிரமணிய ஐயர், பி. ஸ்ரீஆச்சார்யா, பெ. நா. அப்புஸாமி அய்யர், கி. வா. ஜகன்நாதன், தெ. பொ .மீனாட்சிசுந்தரம், அ. ச. ஞானசம்பந்தன், ந. கந்தசாமிப் பிள்ளை, பு. ரா .புருஷோத்தமன், மே. வீ. வேணுகோபாலப்பிள்ளை, கம்பர்அடிப்பொடி சா. கணேசன், வே. வேங்கடராஜுலுரெட்டியார், நீ. கந்தசாமிப்பிள்ளை, ரா. பி. சேதுப் பிள்ளை முதலான தமிழறிஞர்கள் ராஜம் பதிப்பின் பதிப்பாசிரியர் குழுவில் இருந்தவர்களாவர்.
பதிப்பு குறித்தான சமகால மதிப்பீடு:
பள்ளி, கல்லூரிப் பாடத்திட்டங்களில் பாடப்பகுதியாக இருந்த பாடல்களை மட்டும் அச்சிட்டுப் பொருளீட்டி வந்த அன்றைய பதிப்பாளர்களுக்கிடையில் ராஜம் நிறுவனத்தாரின் பதிப்புகள் அவ்வாறான எந்த தேவைசார் பின்புலமும் இல்லாது வெளிவந்துள்ளது. அதே நேரத்தில் எளிய சந்தியமைப்பிலும் மலிவு விலையிலுமாக அமைந்திருந்த இப் பதிப்புகள் குறித்து எவ்விதமான கண்ணோட்டம் அதன் சமகாலத்தில் இருந்தது என்பதை நாம் பார்க்கவேண்டியுள்ளது. மாற்று வடிவிலான பதிப்பை மக்கள் எவ்வாறு அணுகினர் என்பது அப்பதிப்பு குறித்தான மதிப்பீட்டை நமக்குப் புலப்படுத்தும்.
“தமிழ் இலக்கியங்கள் அவ்வளவுமே சாமான்ய மக்களிடத்துச் செல்ல வேண்டுமென்ற எனது புரட்சிகரமான கொள்கைக்கு மர்ரே அண்டு கம்பெனியார்தான் வெற்றி தந்தனர். மலிவுப்பதிப்பாக வெளிவந்த சிலப்பதிகாரமும் மணிமேகலையும் வெளியீட்டு விழாவிலேயே ஒவ்வொன்றிலும் ஆயிரம் பிரதிகள் விற்பனையானதாக அறிந்தேன். இந்தப் பதிப்புகள் இளங்கோ தந்த குரவைப் பாடல்களை இசையரங்குகளில் பாட உதவி புரிந்தன. அதற்கு முன்பு இந்தப் பாடல்களை இசையரங்குகளில் பாடும் வழக்கம் இருந்ததில்லை” 7 என்று மர்ரே பதிப்பு குறித்தான தனது மதிப்பீட்டை ம. பொ. சி. பதிவுசெய்கிறார். மேலும்,
. “மர்ரே அண்டு கம்பெனியார் சிலப்பதிகாரம் - மணிமேகலைப் பதிப்புகளை வெளியிட்ட விழாவில் பேசிய பெரும்புலவர் ஒருவர் ‘இந்த மாதிரி சந்தி பிரித்து வெளியிடும் பதிப்புகளைப் பார்க்கவே என் மனம் சங்கடப்படுகிறது’ என்றார். அவரது கருத்தை மறுத்து நான் பேசியபோது, ‘இரண்டாயிர மாண்டுகளாக என் போன்ற சாமான்யர்களைச் சந்தியில் நிறுத்திச் சங்கடப்படுத்தியது போதாதா? சந்தி பிரித்து வெளியிட்டால்தானே சங்கதி புரிகிறது’ என்று கூறினேன். அவையில் பெருத்த கைதட்டல் ஆரவாரம் எழுந்தது. இதனால் சந்தி பிரித்து வெளியிடுவதை மக்கள் வரவேற்கிறார்கள் என்பது மேடையிலிருந்த புலவர்களுக்குப் புரிந்தது” 8 என்ற ம பொ. சி.யின் கருத்தின் மூலம் சந்தி பிரித்த பதிப்பை மக்கள் எதிர் பாத்துள்ளனர் என்பதை உணரமுடிகிறது.
ஆயினும் சில தமிழறிஞர்களுக்கு மர்ரே பதிப்புகுறித்து உடன்பாடற்ற கருத்துகள் இருந்துள்ளன. ம. பொ .சி. கூறும் செய்தியிலிருந்து அதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. 1957-இல் மர்ரே நிறுவனத்தாரின் சிலப்பதிகாரப் பதிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு அடுத்த ஆண்டு வெளிவந்த (1958-இல்) சிலப்பதிகாரம் மணிமேகலை இரண்டு காப்பியங்களையும் ஒன்றாகச் சேர்த்துப் பதிப்பித்த ‘இரட்டைக் காப்பியங்கள்’ என்ற நூலின் முகவுரையில் வ.சுப. மாணிக்கம் “முற்றும் புணர்ச்சி பிரியாத வலிந்த பதிப்புகள் இன்று தமிழர்க்குக் கைத்துணையாகா. எல்லாப் புணர்ச்சிகளையும் அலக்கலக்காகப் பிரித்த மெலிந்த பதிப்புக்கள் தமிழியல்புக்கு எந்நாளும் பொருந்தா. இற்றைத் தமிழர் அறிவு பெறவும் நாளைத் தமிழ் ஆக்கம் பெறவும், ஊடலும் கூடலும் போல, செவ்வி நோக்கிப் பிரிதலும் புணர்தலும் பெற்ற அளவுப் பதிப்புகள்-நடுத்தரப்பதிப்புகள்-தமிழகத்திற்கு வேண்டுவன, இந் நோக்கத்தால் எழுந்த பதிப்பு இரட்டைக் காப்பியம்”9. என்னும் கருத்தும் கருதத்தக்கது. ஆயினும் மர்ரே பதிப்புகள் மக்களிடத்து பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.
இறுதியாக :
மாற்றுச் சிந்தனையுடனான, அதே நேரத்தில் அறிவியல் அணுகுமுறையிலான ஆய்வுமுறையின் மூலமாகத் தமிழாய்வை மேற்கொண்டவர் பேரா. எஸ். வையாபுரிப் பிள்ளை. பல்வேறு மரபுகளைத் தமிழில் உருவாக்கியவர். மர்ரே பதிப்புகளும் இவரின் சிந்தனையில் உருவானதேயாகும். 1955-இல் முதலாயிரத்திற்குத் தாம் பதிப்பாசிரியராக இருந்து தொடங்கிவைத்த மரபு 1960வரை நாற்பதிற்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவருவதற்குக் காரணமாக இருந்தது. வையாபுரிப்பிள்ளைக்குப் பிறகு சிறந்த பதிப்பாசிரியர் குழுவைக்கொண்டு ஆறு ஆண்டுகளில் நாற்பதிற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுத் தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் ஒரு புதிய மரபை மர்ரே நிறுவனம் உருவாக்கியது. இந் நிறுவன ஆசிரியர் குழுவால் சந்தி பிரித்து உருவாக்கப்பட்டுள்ள முப்பதிற்கும் மேற்பட்ட நூல்கள் இன்னும் வெளியிடப்படாமல் உள்ளன. இவற்றை விரைவில் வெளியிடுவதாகக் கூறியுள்ளனர்.
1960 வரை நூல்களை வெளியிட்டுவந்த மர்ரே நிறுவனம் அறுபதிற்குப் பின்னர் எந்த ஒரு நூலையும் வெளியிடவில்லை. 1960-இல் இலக்கிய வெளியீட்டிற்காக ராஜத்தால் ஏற்படுத்தப்பட்ட ‘சாந்தி சாதனா’ என்ற அமைப்புதான் சில அகராதிகளை வெளியிட்டுள்ளது. அறுபதிற்கு முன் வெளியிடப்பட்ட நூல்களுக்கு உருவாக்கிய அரும்பத விளக்கத்தைத் தொகுத்து வரலாற்று முறைத் தமிழிலக்கியப் பேரகராதியை 2001-இல் சாந்தி சாதனா வெளியிட்டுள்ளது. மர்ரே நிறுவனத்தின் மூலமாக வெளியிடப்பட்ட நூல்களின் விலை ஒரு ரூபாய் என்ற நிலையில் இருந்தது. ‘சாந்தி சாதனா’ என்ற அறக்கட்டளை மூலமாக வெளியிடப்பட்ட அகராதிகளின் விலை அதிகமாக உள்ளது. நிறுவனமாக இருந்த காலத்து மலிவு விலையில் நூல்களை வழங்கிய ராஜம் நிறுவனம், அறக்கட்டளையாக மாற்றப்பட்ட பின்னர் நூல்களின் விலையில் பெரும் மாற்றம் செய்துள்ளது. ஏன் இந்த முரண்பாடென்று தெரியவில்லை. அதே நேரத்தில் 1960 க்குப் பிறகு நூல் வெளியீட்டுப் பணியை நிறுத்திக்கொண்டதற்கான காரணமும் தெரியவில்லை. எப்படியிருந்தாலும் சங்க இலக்கிய மூலபாடப் பதிப்பு என்று சொன்னால் மர்ரே ராஜம் நூல்களையே குறிப்பிடும் படியான ஒரு தனித்துவம் இந் நிறுவனப் பதிப்புகளுக்கு என்றும் உண்டு.
அடிக்குறிப்புகள்
வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று, தமிழ்ப்பல்கலைக்கழகம்- 2002, ப.272.
மேலது ப. 272
மேலது ப. 272
மேலது ப.273
பேரா. எஸ். வையாபுரிப்பிள்ளை (பதி.) திவ்யப்பிரபந்தம் - முதலாயிரம் -1955 –முன்னுரை, ப. 4.
முனைவர் இ. சுந்தரமூர்த்தி, பதிப்பியல் சிந்தனைகள் - 2005, ப.37.
ம. பொ. சிவஞானம், சிலம்பில் ஈடுபட்ட தெப்படி? - 1994, ப.35.
மேலது, ப.36.
வ. சுப. மாணிக்கம், இரட்டைக் காப்பியங்கள் - 1958, முன்னுரை, ப.4.


பின்னிணைப்பு: 1
கால நிரலில் மர்ரே நிறுவனப் பதிப்புகள்
1955 – ஸ்ரீதிவ்யப் பிரபந்தம் – முதலாயிரம்.
1956 - ஸ்ரீதிவ்யப் பிரபந்தம் – திருவாய்மொழி, இயற்பா, பெரியதிருமொழி.
1957– நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு (முதல் தொகுதி), திருவாசகம், கல்லாடம், சிலப்பதிகாரம், மணிமேகலை, கலிங்கத்துப்பரணி, அஷ்டபிரபந்தம்.
1958- அகநானூறு, புறநானூறு, பாட்டும் தொகையும், கம்பராமாயணம் – பாலகாண்டம்( தொகுதி-1), அயோத்தியாகாண்டம் (தொகுதி-2), ஆரணியகாண்டம் ( தொகுதி-3), கிட்கிந்தாகாண்டம் ( தொகுதி-4), சுந்தரகாண்டம் ( தொகுதி-5).
1959- பதினெண்கீழ்க்கணக்கு ( தொகுதி-2), கம்பராமாயணம்- யுத்தகாண்டம் (நான்கு தொகுதிகள்), வில்லிபாரதம் (நான்கு தொகுதிகள்), அருங்கலச்செப்பு, அறநெறிச்சாரம், குலோத்துங்கன் சோழன் உலா, நந்திக்கலம்பகம், நீதிக்களஞ்சியம் (ஆத்திசூடி கொன்றைவேந்தன், வாக்குண்டாம், நல்வழி), முக்கூடற்பள்ளு, நளவெண்பா.
1960- தொல்காப்பியம், குற்றாலக்குறவஞ்சி, சாசன விளக்கம், சந்தி குறியீட்டு விளக்கம்.







பின்னிணைப்பு: 2
ஆசிரியர் குழுவால் பரிசோதித்துச்
சந்திபிரித்து இன்றுவரை வெளியிடப்படாமல் உள்ளவை
இலக்கியம் : சீவகசிந்தாமணி, சூளாமணி, பெருங்கதை, நீலகேசி, யசோதர காவியம், முத்தொள்ளாயிரம்.
சிற்றிலக்கியம்: பாண்டிக்கோவை, மூவருலா, தக்கயாகப்பரணி, திருநாறையூர் நம்பி மேகவிடுதூது, விறலிவிடுதூது, திருக்கலம்பகம், திருவருணைக் கலம்பகம், மதுரைக்கலம்பகம், அழகர்கலம்பகம், திருவாமாத்தூர்க் கலம்பகம்.
பக்திஇலக்கியம்: திருக்கோவையார், திருவிசைப்பா, திருமந்திரம், பதினோராம் திருமுறை, கோயிற்புராணம், திருக்கடைக்காப்பு, தேசிகப்பிரபந்தம், ஸ்ரீமத்வேதாந்த தேசிகரின் அவதாரப்ரகாரம், வார்த்தமாலை.
இலக்கணம்: நன்னூல், யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை, நம்பியகப்பொருள், புறப்பொருள் வெண்பாமாலை, தண்டியலங்காரம், நேமிநாதம், வீரசோழியம், இறையனாரகப்பொருள், பன்னிருபாட்டியல், வெண்பாப்பாட்டியல், தமிழ்நெறி விளக்கம்.

துணைநூற்பட்டியல்.
1. சுந்தரமூர்த்தி, இ. முனைவர் - பதிப்பியல் சிந்தனைகள், சேகர் பதிப்பகம், முதற் பதிப்பு - 2005.
2. மாணிக்கம்.வ.சுப. டாக்டர். (ப.ஆ,)- இரட்டைக்காப்பியம், செல்வி பதிப்பகம், முதற்பதிப்பு - ஜனவரி.1958.
3. விநாயகமூர்த்தி.அ. - பதிப்புப் பார்வைகள், பாலமுருகன் பதிப்பகம், முதற் பதிப்பு- ஜூன் 1983.
4. வரலாற்று முறைத் தமிழ் இலக்கியப் பேரகராதி (முதல் தொகுதி), சாந்தி சாதனா, முதற்பதிப்பு-2001.
5. சிவஞானம். ம.பொ. டாக்டர். - சிலம்பில் ஈடுபட்ட தெப்படி? , பூங்கொடி பதிப்பகம், முதற்பதிப்பு, ஜூன் 1994.
6. ஆசிரியர் குழு- சந்தி குறியீட்டு விளக்கம், மர்ரே அண்ட் கம்பெனி, 195?
7. பாலுசாமி .ந. முனைவர். (மு.ப.ஆ.) - வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று, தமிழ்ப் பல்கலைக் கழகம்,
தஞ்சாவூர், மறுபதிப்பு - 2002.